Wednesday, December 30, 2020

6 ஆம் வகுப்பு திருக்குறள் பாடப்பகுதி

வாழ்வியல்

கடவுள் வாழ்த்து(1)

 1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

    பகவன் முதற்றே உலகு

    அகரமே எழுத்துகளுக்குத் தொடக்கம். ஆதி பகவனே உலகுக்கு தொடக்கம்

 2. கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்

     நற்றாள் தொழாஅர் எனின்

   தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை     தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன்என்ன

3. மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்

    நிலமிசை நீடுவாழ் வார்

   மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு,உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

4. வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு

    யாண்டும் இடும்பை இல

 விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி           நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

 கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம்       அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

6. பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க

   நெறிநின்றார் நீடுவாழ் வார்

ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

7. தனக்குஉவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

    மனக்கவலை மாற்றல் அரிது

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

8. அறாஅழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

    பிறஆழி நீந்தல் அரிது

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.

9. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

    தாளை வணங்காத் தலை

கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

10.பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

    இறைவன் அடிசேரா தார்

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

வான் சிறப்பு(2)

1. வான்நின்று உலகம் வழங்கி வருதலான்

    தான்அமிழ்தம் என்று உணரற் பாற்று

உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.

2. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

    துப்பாய தூஉம் மழை

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

3. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

    உள்நின்று உடற்றும் பசி

(மழை உரியகாலத்தில் பெய்யாது போனால் உலகத்து உயிர்களை எல்லாம் பசி துன்புறுத்தும்)

4.ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

   வாரி வளங்குன்றிக் கால்

மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.

5. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

    எடுப்பதூஉம் எல்லாம் மழை

(உரிய காலத்தில் பெய்யாது கெடுப்பதும் மழைதான். உரிய காலத்தில் பெய்து காப்பதும் மழைதான்)

6. விசும்பின் துளிவீழின் அல்லால்மற்று ஆங்கே

    பசும்புல் தலைகாண்பு அரிது

விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.

7. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்துஎழிலி

    தான்நல்காது ஆகி விடின்

மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.

8. சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

   வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.

9. தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

    வானம் வழங்காது எனின்

மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.

10. நீர்இன்று அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்

     வான்இன்று அமையாது ஒழுக்கு

உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

நீத்தார் பெருமை(3)

1. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

    வேண்டுதல் பனுவல் துணிவு

ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம் பெறும்.

2. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

   இறந்தாரை எண்ணிக்கொண் டற்று

பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

3. இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

    பெருமை பிறங்கிற்று  உலகு

பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.

4. உரன்என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

    வரன்என்னும் வைப்பிற்கோர் வித்து

உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்

5. ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு உளார்கோமான்

    இந்திரனே சாலும் கரி

ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.

6. செயற்குஅரிய செய்வார் பெரியார் சிறியர்

    செயற்கரிய செய்கலா தார்

முடியாத செயலையும் முடித்துக் காட்டுபவர் பெரியோர். முடியாது என்பவர் சிறியோர்

7. சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று ஐந்தின்

     வகைதெரிவான் கட்டே உலகு

ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.

8. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

    மறைமொழி காட்டி விடும்

சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக் காட்டும்.

9. குணம்என்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி

    கணமேயும் காத்தல் அரிது

குணக்குன்றுகளான பெரியவர்கள் கோபம் கொண்டால் அந்தக் கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட நிலைத்து நிற்காது.

10. அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும்

      செந்தண்மை பூண்டுஒழுக லான்

அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.

Group -4  அறன் வலியுறுத்தல்(4)

1. சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊங்கு

    ஆக்கம் எவனோ உயிர்க்கு

அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது.

2. அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை அதனை

    மறத்தலின் ஊங்குஇல்லை கேடு

ஒரு வருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.

3. ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

    செல்லும்வாய் எல்லாம் செயல்

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

4. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

    ஆகுல நீர பிற

உள்ளத்தில் குற்றம் இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும். மற்றவை எல்லாம் வெறும் ஆரவாரமே

 5. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

     இழுக்கா இயன்றது அறம்

பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் பேசுதல் ஆகிய நான்கும் இல்லாமல் வாழ்வதே அறம் ஆடும்

6. அன்று அறிவாம் என்னாது அறம்செய்க மற்றது

    பொன்றுங்கால் பொன்றாத் துணை

பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.

7. அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை

    பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

பல்லக்கை சுமப்பவனும் அதன்மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.

8. வீழ்நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃதுஒருவன்

    வாழ்நாள் வழியடைக்கும் கல்

ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.

9. அறத்தான் வருவதே இன்பம்மற்று எல்லாம்

     புறத்த புகழும் இல

அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.

10. செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு

      உயற்பாலது ஓரும் பழி

ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.

மக்கட்பேறு(7)

1. பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த

     மக்கட்பேறு அல்ல பிற

பெறத்தகுந்த பேறுகளில் அறிய வேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர, மற்றப்பேறுகளை யாம் மதிப்பதில்லை.

2.எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

    பண்புடை மக்கள் பெறின்

பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.

3. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

    தம்தம் வினையான் வரும்

தம் பொருள் என்பது தம்மக்களையேயாம். அம்மக்களின் பொருள்கள் அவரவர் செயல்களின் விளைவாக வரக்கூடியவை.

4. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

    சிறுகை அளாவிய கூழ்

தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.

5. மக்கள்மெய் தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர்

    சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.

6. குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

     மழலைச்சொல் கேளா தவர்

தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்

7. தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து

   முந்தி இருப்பச் செயல்

தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்

8. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

     மன்னுயிர்க்கு எல்லாம் இனிது

தம்மைவிடத தம் பிள்ளைகள் அறிவுடையோர் என்றால் மக்களுக்கு அதுதான்  மகிழ்ச்சி

9. ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

    சான்றோன் எனக்கேட்ட தாய்

தன் பிள்ளையின் புகழை கேட்ட தாய் பெற்றெடுத்தபோது அடைந்த மகிழ்ச்சியை விடப் பெருமகிழ்ச்சி அடைவாள்

10. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

     என்நோற்றான் கொல்எனும் சொல்

மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும். 

group 4 அன்புடைமை(8)

1. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்

    புண்கண்நீர் பூசல் தரும்

உள்ளத்தில் இருக்கும் அன்பைத் தாழ்ப்பாள் போட்டு அடைத்து வைக்க முடியாது. அன்புக்குரியவரின் துன்பங்காணுமிடத்து, கண்ணீர்த்துளி வாயிலாக அது வெளிப்பட்டுவிடும்.

2. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

    என்பும் உரியர் பிறர்க்கு

அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளும் எனக்கே என்பார்கள். அன்பு உடையவர்கள் தம் உடம்பும் பிறர்க்கே என்பார்கள்

3. அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

    என்போடு இயைந்த தொடர்பு

அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.

4. அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்

    நண்புஎன்னும் நாடாச் சிறப்பு

அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.

5. அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

    இன்புற்றார் எய்தும் சிறப்பு

உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.

6. அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்

     மறத்திற்கும் அஃதே துணை

அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது.

7. என்பு இலதனை வெயில்போலக் காயுமே

    அன்பி லதனை அறம்

எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.

8. அன்பகத்து இல்லா  உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

    வற்றல் மரம்தளிர்த் தற்று

அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழக்கை வளமற்ற பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.

9. புறத்துறப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை

    அகத்துறுப்பு அன்பி லவர்க்கு

உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின் புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்..

10. அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

     என்புதோல் போர்த்த உடம்பு

அன்பு இருப்பது தான் உயிருள்ள உடல். அன்பு இல்லாதது வெறும் எலும்பும் தோலும் தான்

group 4 விருந்தோம்பல்(9)

1. இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி

    வேளாண்மை செய்தற் பொருட்டு

இல்லறத்தைப் போற்றி வாழ்வது, விருந்தினரை வரவேற்று, அவர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காகவே.

2. விருந்து புறத்தாத் தானுண்டல் சாவா

    மருந்துஎனினும் வேண்டற்பாற்று அன்று

விருந்தினராக வந்தவரை வெளியே விட்டுவிட்டுச் சாகாத மருந்தாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்பது விரும்பத் தக்க பண்பாடல்ல.

3.வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

   பருவந்து பாழ்படுதல் இன்று

விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.

4. அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து

     நல்விருந்து ஓம்புவான் இல்

நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

5. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

    மிச்சல் மிசைவான் புலம்

விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ

6. செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்துஇருப்பான்

     நவ்விருந்து வானத் தவர்க்கு

வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.

7. இணைத்துணைத்து என்பதொன்று இல்லை விருந்தின்

   துணைத்துணை வேள்விப் பயன்

விருந்தினராக வந்தவரின் சிறப்பை எண்ணிப் பார்த்து விருந்தோம்பலை ஒரு வேள்வியாகவே கருதலாம்.

8. பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி

     வேள்வி தலைப்படா தார்

செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்.

9. உடைமைபுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

    மடமை மடவார்கண் உண்டு

செல்வநிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்: அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்.

10. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

      நோக்கக் குழையும் விருந்து

அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.

இனியவைக் கூறல்(10)*******

 1. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

     செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.

2.அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து

   இன்சொலன் ஆகப் பெறின்

முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்.

3. முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான் ஆம்

   இன்சொ லினதே அறம்

முகம் மலர நோக்கி, அகம் மலர இனிய சொற்களைக் கூறுவதே அறவழியில் அமைந்த பண்பாகும்.

4.துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

   இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

5. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

    அணியல்ல மற்றுப் பிற

பணிவும் இன்சொல்லுமே ஒருவருக்கு மிகச்சிற்ந்த அணி

6. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

    நாடி இனிய சொலின்

பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.

7. நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

    பண்பின் தலைப்பிரியாச் சொல்

பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள்,வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.

8. சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்

     இம்மையும் இன்பம் தரும்

பிறர்க்குத் துன்பம் விளைக்கும் சிறுமையிலிருந்து நீங்கிய இனிய சொற்கள் மறுமைக்கும் இம்மைக்கும் வழங்குவோனுக்கு இன்பம் தரும்.

9. இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ

    வன்சொல் வழங்கு வது

இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்

10. இனிய உள்வாக இன்னாத கூறல்

      கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

இனிய சொல் இருக்கும் போது இன்னாச்சொல் பேசுவது கனி இருக்கும்போது காயை உண்பதைப் போன்றது

பயனில சொல்லாமை(20)

1. பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான்

    எல்லாரும் எள்ளப் படும்

கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.

2. பயன்இல  பல்லார்முன்  சொல்லல் நயன்இல

     நட்டார்கண் செய்தலின் தீது

பலர் முன்னே பயனில்லாத சொற்களைச் சொல்லுதல், நண்பரிடத்தில் அறம் இல்லா செயல்களைச் செய்தலை விடத் தீமையானதாகும்.

3. நயனிலன் என்பது சொல்லும் பயன்இல

பாரித்து உரைக்கும் உரை

ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

4. நயன்சாரா நன்மையின் நீங்கும் பயன்சாராப்

    பண்புஇல்சொல் பல்லார் அகத்து

பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.

5. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன்இல

நீர்மை உடையார் சொலின்

பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.

6. பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்

மக்கட் பதடி எனல்

பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.

7. நயன்இல சொல்லினும் சொல்லுக சான்றோர்

     பயனில சொல்லாமை நன்று

அறம் இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், சான்றோர் பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமல் இருத்தல் நன்மையாகும்.

8. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

    பெருபயன் இல்லாத சொல்

அருமையான பயன்களை ஆராயவல்ல அறிவை உடைய அறிஞர், மிக்க பயன் இல்லாத சொற்களை ஒருபோதும் சொல்லமாட்டார்.

9. பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த

    மாசறு காட்சி யவர்

மயக்கம் சிறிதுமில்லாத மாசற்ற அறிவுடையவர் மறந்தும்கூடப் பயனற்ற சொற்களைச் சொல்ல மாட்டார்.

10. சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க

      சொல்லில் பயனிலாச் சொல்

சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.

group 4 ஈகை(23)

1. வறியார்க்குஒன்று ஈவதே ஈ9கைமற்று எல்லாம்

     குறியெதிர்ப்பை நீரது உடைத்து

இல்லாதவர்க்கு தருவதே ஈகை ஆகும். மற்றவை எல்லாம் பயனை எதிர்பார்த்துச் செய்பவை ஆகும்

2. நல்ஆறு எனினும் கொளல்தீது மேலுலகம்

    இல்எனினும் ஈதலே நன்று

பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.

3. இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்

    குலன்உடையான் கண்ணே உள

யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.

4. இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்

    இன்முகம் காணும் அளவு

ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்.

5. ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை

     மாற்றுவார் ஆற்றலின் பின்

பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.

6. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்

    பெற்றான் பொருள்வைப் புழி

வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

7. பாத்துஊண் மரீஇ யவனைப் பசியென்னும்

    தீப்பிணி தீண்டல் அரிது

தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.

8. ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை

    வைத்திழக்கும் வன்க ண்வர்

இல்லாதவர்க்கு தருவதால் உண்டாகும் இன்பத்தை அறியாதவர்கள் பொருளைச் சேர்த்து வைத்துப் பின் அதனை இழந்து விடுவார்கள்

9. இரத்தலின் இன்னாதது மன்ற நிரப்பிய

     தாமே தமியர் உணல்

பிறர்க்கு ஈ.வதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்ணுவது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.

10. சாதலின் இன்னாதது இல்லை இனிதுஅதூஉம்

      ஈதல் இயையாக் கடை

சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது.

கள்ளாமை(29)

1. எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்துஒன்றும்

     கள்ளாமை காக்கதன் நெஞ்சு

பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.

2. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

    கள்ளத்தால் கள்வேம் எனல்

குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே, அதானால் பிறன் பொருளை அவன் அறியாதப் வகையால் வஞ்சித்துக்கொள்வோம் என்று எண்ணாதிருக்க வேண்டும்.

3. களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து

    ஆவது போலக் கெடும்

கொள்ளையடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்.

4. களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்

    வீயா விழுமம் தரும்

களவு செய்வதில் ஒருவனுக்கு ஏற்படும் தணியாத தாகம், அதனால் உருவாகும் விளைவுகளால் தீராத துன்பத்தை உண்டாக்கும்.

5. அருள்கருதி அன்புடையார் ஆதல் பொருள்கருதிப்

    பொச்சாப்புப் பார்பார்கண் இல்

மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது.

6. அளவின்கண் நின்றுஒழுகல் ஆற்றார் களவின்கண்

     கன்றிய காத லவர்

ஓர் எல்லைக்குட்பட்டு வாழ்வைச் செம்மையாக அமைத்துக் கொள்ளாதவர்கள், களவு செய்து பிறர் பொருளைக் கொள்வதில் நாட்டமுடையவராவார்கள்

7. களவுஎன்னும் கார்அறி வாண்மை அளவுஎன்னும்

    ஆற்றல் புரிந்தார்கண் இல்

களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.

8. அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்

    களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு

நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.

9. அளவுஅல்ல செய்துஆங்கே வீவர் களவுஅல்ல

     மற்றைய தேற்றா தவர்

அளவு என்பதைத் தவிர வேறு நல்வழிகளை நாடாதவர்கள், வரம்பு கடந்த செயல்களால் வாழ்விழந்து வீழ்வார்கள்.

10. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்

      தள்ளாது புத்தேள் உலகு

களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.

இன்னா செய்யாமை(32)

1. சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா

    செய்யாமை மாசுஅற்றார் கோள்

மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்

2. கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா

     செய்யாமை மாசுஅற்றார் கோள்

ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.

3. செய்யாமை செற்றார்க்கும் இன்னாத செய்தபின்

     உய்யா விழுமம் தரும்                                                

யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்.

4. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

     நன்னயம் செய்து விடல்

நமக்கு துன்பம் செய்தவர் நாணும்படி அவருக்கு நன்மை செய்வது தான் அவரை தண்டிக்கும் வழியாகும்

5. அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

     தம்நோய்போல் போற்றாக் கடை

பிற உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல் கருதாவிட்டால் தாம் பெற்றுள்ள அறிவால் எந்தப் பயனும் இல்லை

6. இன்னா  எனத்தான் உணர்ந்தவை துன்னாமை

    வேண்டும் பிறன்கண் செயல்

ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

7. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

     மாணாசெய் யாமை தலை

நம் உள்ளம் ஏற்றுக் கொள்ளாத எச்செயலையும் எக்காலத்திலும் யாருக்கும் சிறிதளவுகூடச் செய்யக் கூடாது

8. தன்னுயிர்க்கு இன்னாமை தான் அறிவான் எனக்கொலோ

    மன்னுயிர்க்கு இன்னா செயல்

தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.

9. பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

    பிற்பகல் தாமே வரும்

முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.

10. நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

     நோயின்மை வேண்டு பவர்                                                   

துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.

கொல்லாமை(33)

1. ஆறவினை யாது எனின் கொல்லாமை கோறல்

    பிறவினை எல்லாம் தரும்

எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.

2. பகுத்துஉண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

    தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

தம்மிடம் இருப்பவற்றை பிற உயிர்களுக்கு பகிர்ந்து கொடுத்துக் காப்பாற்ற வேண்டும். அதுவே அறநூல்களில் கூறப்படும் அறங்களுள் சிறந்தது

3. ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன்

    பின்சாரப் பொய்யாமை நன்று

இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.

4. நல்ஆறு எனப்படுவது  யாதுஎனின் யாதுஒன்றும்

    கொல்லாமை சூழும் நெறி

நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால், எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.

5. நிலைஅஞ்சி  நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்

    கொல்லாமை சூழ்வான் தலை

உலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும்விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார்.

6. கொல்லாமை  மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்

     செல்லாது உயி உண்ணும் கூற்று

கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைக்கொண்டு செல்லும் கூற்றுவனும் செல்லமாட்டான்.

7. தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது

    இன் உயிர் நீக்கும் வினை

தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிச் செல்வதாக இருந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.

8. நன்றுஆகும் ஆக்கம் பெரிதுஎனினும் சான்றோர்க்குக்

    கொன்று ஆகும் ஆக்கம் கடை

பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்.

9. கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்

     புன்மை தெரிவார் அகத்து

பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும்.

10. உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்

      செல்லாத்தீ வாழ்க்கை யவர்

வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்.

group 4  ஊக்கமுடைமை(60)

1. உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
    உடையது உடையரோ மற்று.

ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.

2. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
    நில்லாது நீங்கி விடும்.

ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.

3. ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
    ஒருவந்தம் கைத்துடை யார்.

ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள்.

4. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
    ஊக்க முடையா னுழை.

உயர்வு, உறுதியான ஊக்கமுடையவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் போய்ச் சேரும்.

5. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
     உள்ளத் தனையது உயர்வு.

தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும்.

6. உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
     தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

நினைப்பதெல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கவேண்டும். அது கைகூடாவிட்டாலும் அதற்காக அந்த நினைப்பை விடக்கூடாது.

7. சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
    பட்டுப்பா டூன்றுங் களிறு.

உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.

8. உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
    வள்ளியம் என்னுஞ் செருக்கு.

அள்ளி வழங்கும் ஆர்வம் இல்லாத ஒருவர் தம்மை வள்ளல் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள வழியே இல்லை.

9. பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை   
    வெரூஉம் புலிதாக் குறின்.

யானை பருத்த உடம்பை உடையது, கூர்மையானக் கொம்புகளை உடையது, ஆயினும் ஊக்கமுள்ளதாகியப் புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.

10. உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
      மரம்மக்க ளாதலே வேறு.

மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.

 பெரியாரைப் பிழையாமை(90)

1. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்

     போற்றலுள் எல்லாம் தலை

ஆற்ற்ல் உடையவர்களை இகழக் கூடாது. அதுவே தம்மைத் தீங்கிலிருந்து காத்துக் கொள்ளும் வழிகளுள் சிறந்த வழியாகும்

2. பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
    பேரா இடும்பை தரும்.

பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்.

3. கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
    ஆற்று பவர்கண் இழுக்கு.

அழிக்க வேண்டுமானால் அவ்வாறே செய்து முடிக்க வல்லவரிடத்தில் தவறு செய்தலை, ஒருவன் கெட வேண்டுமானால் கேளாமலேச் செய்யலாம்.

4. கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
    ஆற்றாதார் இன்னா செயல்
.

ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.

5. யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
    வேந்து செறப்பட் டவர்.

மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ முடியாது.

6. எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்

    பெரியார்ப் பிழைத்தொழுகு வார்

தீயினால் சுடப்பட்டவர் கூடப் பிழைத்துக் கொள்ள முடியும். ஆனால் பெரியவர்களுக்குத் தீங்கு செய்தவர் தப்ப முடியாது

7. வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
    தகைமாண்ட தக்கார் செறின்.

தகுதியால் சிறப்புற்ற பெரியவர் ஒருவனை வெகுண்டால் அவனுக்கு பலவகையால் மாண்புற்ற வாழ்க்கையும் பெரும் பொருளும் இருந்தும் என்ன பயன்.

8. குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
      நின்றன்னார் மாய்வர் நிலத்து.

மலை போன்றவர்களின் பெருமையைக் குலைப்பதற்கு நினைப்பவர்கள், நிலைத்த பெரும் செல்வமுடையவர்களாக இருப்பினும் அடியோடு அழிந்து போய் விடுவார்கள்.

9. ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
    வேந்தனும் வேந்து கெடும்.

உயர்ந்த கொள்கை உறுதி கொண்டவர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்.

10. இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
      சிறந்தமைந்த சீரார் செறின்.

மிகச் சிறப்பாக அமைந்த பெருமையுடையவர் வெகுண்டால் அளவு கடந்து அமைந்துள்ள சார்புகள் உடையவரானாலும் தப்பி பிழைக்க முடியாது.

 

Book back

1. விருந்தினரின் முகம் எப்போது வாடும்? நம் முகம் மாறினால்

2. நிலையான செல்வம் ஊக்கம்

3. ஆராயும் அறிவு உடையவர்கள் பயன்தராத சொற்களைப் பேசமாட்டார்

4. பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது      பொருள்+உடைமை

5. உள்ளுவது+எல்லாம் என்பதனை சேர்த்து ந்ழுதக் கிடைக்கும் சொல் உள்ளுவதெல்லாம்

6. பயன்+இலா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் பயனிலா

7. ஏழைகளுக்கு உதவி செய்வதே ஈகை   ஆகும்

8. பிற உயிர்களின்  துன்பத்தை   கண்டு வருந்துவதே அறிவின் பயனாகும்

9. உள்ளத்தில் குற்றம்   இல்லாமல் இருப்பதே சிறந்த அறமாகும்

1.நயம் அறிக

1. உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது

    தள்ளினும் தள்ளாமை நீர்த்து

இக்குறளில் உள்ள எதுகை, மோனை சொற்களை எடுத்து எழுதுக

விடை:

அடி எதுகை : உள்ளுவது – தள்ளினும்
அடி மோனை : உள்ளுவது – உயர்வுள்ளல்

2. இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக

1. பணிவுடையன் ஆதல் இன்சொலன் ஒருவற்கு

    மற்றுப் பிற அணியல்ல

விடை

   பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
   அணியல்ல மற்றுப் பிற.

2. உள்ளுவது உயர்வுள்ளல் எல்லாம் மற்றது
    தள்ளாமை தள்ளினும் நீர்த்து.

விடை

    உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
   தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

3. வறியார்க்கொன்று ஈகைமற்று ஈவதே எல்லாம்

    குறியெதிர்ப்பை உடைத்து நீரது

விடை

   வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
   குறியெதிர்ப்பை நீரது உடைத்து.

4. எனைத்தானும் யார்க்கும் எஞ்ஞான்றும் மனத்தானாம்

    மாணாசெய் தலை யாமை

விடை

    எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
    மாணாசெய் யாமை தலை.

3. “ஊக்கமது கைவிடல்”என்பது ஒளவையாரின் ஆத்திசூடி. இவ்வரியோடு தொடர்புடைய திருக்குறளை தேர்ந்தெடுக்க

1. விருந்து புறத்ததாத தாணுண்டல் சாவா

   மருந்தெனினும் வேண்டாற்பாற் அன்று

2. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை

    நில்லாது நீங்கி விடும்

3. சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க

    சொல்லில் பயன்இலாச் சொல்

விடை

   உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
   நில்லாது நீங்கி விடும்.

4. பின்வரும் நிகழ்வைப் படித்து அதற்குப் பொருத்தமான திருக்குறள் எதுவெனக் காண்க

1. வீட்டிற்குள் வந்த வேலனை தந்தை அழைத்தார். “உங்கள் பள்ளியில் பேச்சுப்போட்டி நடப்பதாகக் கூறினாயே, பெயர் கொடுத்து விட்டாயா?” என்று கேட்டார். “இல்லையப்பா, அமுதன் என்னைவிட நன்றாகப் பேசுவான். அவனுக்குத்தான் பரிசு கிடைக்கும். எனவே நான் பெயர் கொடுக்கவில்லை” என்றான் வேலன். “போட்டியில் வெற்றியும் தோல்வியும் இயல்புதான். அதற்காகப் போட்டியிடாமல் விலகக்கூடாது. நாம் எந்த அளவு ஊக்கத்துடன் செயல்படுகிறோமோ அந்த அளவிற்கு வெற்றி கிடைக்கும். எனவே நீ போட்டியில் கலந்துகொள்” என்றார் அப்பா. உற்சாகம் அடைந்தான் வேலன். “நாளை பெயர் கொடுத்துவிடுகிறேன்” என்றான்.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
விடை

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.

 2. நிற்சிமதி அவளுடைய தோழிகளுடன் பூங்காவிற்குச் சென்றாள். அங்குள்ள இயற்கை காட்சிகளை கண்டு மகிழ்ந்தாள். நண்பகல் நேரத்தில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து தான் கொண்டு வந்திருந்த உணவைத் தோழிகளுடன் பகிர்ந்து உண்டாள். அவர்களின் அருகே பறவைகள் பறந்து வநதன தம்மிடம் இருந்த உணவை பறவைகளுக்கும் அளித்தாள்

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற.

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

விடை

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

No comments:

Post a Comment

மாநில அரசு

  தேசிய தலைநகரான டெல்லியுடன் சேர்த்து 9 யூனியன் பிரதேசங்கள், 28 மாநிலங்கள் உள்ளன பகுதி VI ல் 152 முதல் 237 வரை உள்ள சட்டபிரிவு மாநிலஙகள் ப...