Tuesday, January 19, 2021

10 ஆம் வகுப்பு திருக்குறள் பாடப்பகுதி

group 4 ஒழுக்கம் உடைமை(14)

1. ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப் படும்.

ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

2. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
    தேரினும் அஃதே துணை

ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.

3. ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
    இழிந்த பிறப்பாய் விடும்.

ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

4. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

கற்ற மறைப் பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவனுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடு்ம்.

5. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
    ஒழுக்க மிலான்கண் உயர்வு.

பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.

6. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
    ஏதம் படுபாக் கறிந்து

ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.

7. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
    எய்துவர் எய்தாப் பழி.

ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

8. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
    என்றும் இடும்பை தரும்.

நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.

9. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
   வழுக்கியும் வாயாற் சொலல்.

தீய சொற்களைத் தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.

10. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
      கல்லார் அறிவிலா தார்.

உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

மெய் உணர்தல்(36)

1. பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
    மருளானாம் மாணாப் பிறப்பு.

மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

2. இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
    மாசறு காட்சி யவர்க்கு.

மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக்கொடுக்கும்.

3. ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
    வானம் நணிய துடைத்து.

ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.

4. ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
    மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.

மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.

5. எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்பது அறிவு.

வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்

6. கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
    மற்றீண்டு வாரா நெறி.

கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.

7. ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
    பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.

8. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
    செம்பொருள் காண்பது அறிவு.

பிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

9. சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
    சார்தரா சார்தரு நோய்.

எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.

10. காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
      நாமம் கெடக்கெடும் நோய்.

விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக் குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வராமற் கெடும்.

group 4 பெரியாரை துணைக்கோடல்(45)

1. அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
    திறனறிந்து தேர்ந்து கொளல்.

அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

2. உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
    பெற்றியார்ப் பேணிக் கொளல்.

எண் வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.

3. அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
   பேணித் தமராக் கொளல்.

பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.

4. தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
    வன்மையு ளெல்லாந் தலை.

அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்.

5. சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
    சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.

தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்.

6. தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
   செற்றார் செயக்கிடந்த தில்.

தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.

7. இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
    கெடுக்குந் தகைமை யவர்.

கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.

8. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பா ரிலானுங் கெடும்.

கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

9. முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
    சார்பிலார்க் கில்லை நிலை.

முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

10. பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
      நல்லார் தொடர்கை விடல்.

நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.

கொடுங்கோண்மை(56)

1. கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
    அல்லவை செய்தொழுகும் வேந்து.

குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.

2. வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
    கோலொடு நின்றான் இரவு.

ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.            

3. நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
    நாள்தொறும் நாடு கெடும்.

ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.

4. கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
    சூழாது செய்யும் அரசு.

நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.

5. அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
    செல்வத்தைத் தேய்க்கும் படை.

கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.

6. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
    மன்னாவாம் மன்னர்க் கொளி.

நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும். இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்.

7. துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
    அளியின்மை வாழும் உயிர்க்கு.

மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.

8. இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
    மன்னவன் கோற்கீழ்ப் படின்.

முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.

9. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
    ஒல்லாது வானம் பெயல்.

அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.

10. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
      காவலன் காவான் எனின்.

கண்ணோட்டம்(58)

1. கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
    உண்மையான் உண்டிவ் வுலகு.

கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.

2. கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
    உண்மை நிலக்குப் பொறை.

கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை.

3. பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
    கண்ணோட்டம் இல்லாத கண்.

பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.

4. உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
   கண்ணோட்டம் இல்லாத கண்.

தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்.

5. கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
    புண்ணென்று உணரப் படும்.

கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல; புண்.

6. மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
    டியைந்துகண் ணோடா தவர்.

ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்.

7. கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
    கண்ணோட்டம் இன்மையும் இல்.

கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர், கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லா திருத்தலும் இல்லை.

8. கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
    உரிமை உடைத்திவ் வுலகு.

தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது.

9. ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப் 
    பொறுத்தாற்றும் பண்பே தலை.

அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்.

10. பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
      நாகரிகம் வேண்டு பவர்.

கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்.

ஆள்வினை உடைமை(62)

1. அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
    பெருமை முயற்சி தரும்.

நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.

2. வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
    தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.

எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்.

3. தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
    வேளாண்மை என்னுஞ் செருக்கு.

பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக் கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்.

4. தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
    வாளாண்மை போலக் கெடும்.

ஊக்கமில்லாதவர் உதவியாளராக இருப்பதற்கும், ஒரு பேடி, கையிலே வாள்தூக்கி வீசுவதற்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.

5. இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
    துன்பம் துடைத்தூன்றும் தூண்.

தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்க்கொண்டச் செயலை முடிக்க விரும்புகிறவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.

6. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
     இன்மை புகுத்தி விடும்.

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.

7. மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
    தாளுளான் தாமரையி னாள்.

திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்.

8. பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
    ஆள்வினை இன்மை பழி.

விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்.

9. தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும்.

கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.

10. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
      தாழாது உஞற்று பவர்.

ஊழ் என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள். சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்.

அமைச்சு(64)

1. கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
    அருவினையும் மாண்டது அமைச்சு.

செயலுக்கு உரிய கருவியும், ஏற்றக் காலமும், செய்யும் வகையும் செய்யப்படும் அறியச் செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்.

2. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
    ஐந்துடன் மாண்டது அமைச்சு.

அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும் முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப்பெற்றவன் அமைச்சன்.

3. பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் 
    பொருத்தலும் வல்ல தமைச்சு.

பகைவர்ககு துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.

4. தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
    சொல்லலும் வல்லது அமைச்சு.

ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தாலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈ.டுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்.

5. அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
    திறனறிந்தான் தேர்ச்சித் துணை.

அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும், செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும்.

6. மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
    யாவுள முன்நிற் பவை.

இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன.

7. செயற்கை அற஧ந்தக் கடைத்தும் உலகத்து
    இயற்கை அறிந்து செயல்.

நூலறிவால் செயலைச் செய்யும் வகைகளைச் அறிந்த போதிலும் உலகத்தின் இயற்கையை அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்யவேண்டும்.

8. அறிகொன்று அறியான் எனினும் உறுதி
    உழையிருந்தான் கூறல் கடன்.

சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்.

9. பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
   எழுபது கோடி உறும்.

தவறான வழிகளை எண்ணி கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.

10. முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
      திறப்பாடு இலாஅ தவர்.

முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்.

பொருள் செயல்வகை(76)

1. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
     பொருளல்லது இல்லை பொருள்.

மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.

2. இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
    எல்லாரும் செய்வர் சிறப்பு.

பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது.

3. பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
     எண்ணிய தேயத்துச் சென்று.

பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தா விளக்கு, நினைத்த இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்.

4. அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
    தீதின்றி வந்த பொருள்.

சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல், சேர்க்கப் பட்டுவந்த பொருள் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும் இன்பத்தையும் கொடுக்கும்.

5. அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
    புல்லார் புரள விடல்.

அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.

6. உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
     தெறுபொருளும் வேந்தன் பொருள்.

வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும்.

7. அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
    செல்வச் செவிலியால் உண்டு.

அன்பினால் பெறப்பட்ட அருள் என்றுக் கூறப்படும் குழந்தை, பொருள் என்றுக் கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்.

8. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
    உண்டாகச் செய்வான் வினை.

தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு ஒருவன் செயல் செய்தால், மலையின் மேல் ஏறி யானைப் போரைக் கண்டாற் போன்றது.

9. செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
    எஃகதனிற் கூரிய தில்.

பகைவரின் செருக்கை அழிக்கும் தகுதியான கருவி பொருளைத் தவிர வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது.

10. ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
     ஏனை இரண்டும் ஒருங்கு.

சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒரு சேரக்கைகூடும் எளிய பொருளாகும்.

கூடா நட்பு(83)

1. சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
    நேரா நிரந்தவர் நட்பு.

அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும்.

2. இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
     மனம்போல வேறு படும்.

இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.

3. பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
    ஆகுதல் மாணார்க் கரிது.

அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும், பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்.

4. முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
     வஞ்சரை அஞ்சப் படும்.

முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.

5. மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் 
    சொல்லினால் தேறற்பாற்று அன்று.

மனம் வேறு செயல் வேறாக இருப்பவர்களின் வார்த்தைகளை நம்பி எந்தவொரு தெளிவான முடிவையும் எடுக்க இயலாது.

6. நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
    ஒல்லை உணரப் படும்.

நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்னபோதிலும் பகைமை கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரைவில் உணரப்படும்.

7. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
    தீங்கு குறித்தமை யான்.

பகைவரிடம் காணப்படும் சொல் வணக்கம் என்பது வில்லின் வணக்கத்தைப் போல் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால், அதனை நம்பக் கூடாது.

8. தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
     அழுதகண் ணீரும் அனைத்து.

பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.

9. மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
    நட்பினுள் சாப்புல்லற் பாற்று.

புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில் இகழ்கின்றவரைத் தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து அத் தொடர்பு சாகுமாறு நடக்க வேண்டும்.

10. பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
     அகநட்பு ஒரீஇ விடல்.

பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும்.

பகை மாட்சி(87)

1. வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
    மெலியார்மேல் மேக பகை.

தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.

2. அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
    என்பரியும் ஏதிலான் துப்பு.

ஒருவன் அன்பு இல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதடனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்.

3. அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
    தஞ்சம் எளியன் பகைக்கு.

அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும், இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.

4. நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
    யாங்கணும் யார்க்கும் எளிது.

சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம்.

5. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
    பண்பிலன் பற்றார்க்கு இனிது.

ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கும் எளியனவான்.

6. காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
    பேணாமை பேணப் படும்.

ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால் அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.

7. கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
     மாணாத செய்வான் பகை.

தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்.

8. குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
    இனனிலனாம் ஏமாப் புடைத்து.

ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.

9. செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
    அஞ்சும் பகைவர்ப் பெறின்.

அறிவு இல்லாத அஞ்சும் இயல்புடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்து பகை கொள்பவர்க்கு இன்பங்கள் தொலைவில் நீங்காமல் இருக்கும்.

10. கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
      ஒல்லானை ஒல்லா தொளி.

பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்.

நன்றிஇல் செல்வம்(101)

1. வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
    செத்தான் செயக்கிடந்தது இல்.

ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நூகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை.

2. பொருளானாம் எல்லாம்என்று ஈயாது இவறும்
     மருளானா மாணாப் பிறப்பு.

பொருளால் எல்லாம் ஆகும் என்று பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் இறுகப்பற்றிய மயக்கத்தால் சிறப்பில்லாத பிறவி உண்டாம்.

3. ஈட்டம் இவறி இசைவேண்டா வாடவர்  
    தோற்றம் நிலக்குப் பொறை.

சேர்த்து வைப்பதையே விரும்பிப் பற்றுள்ளம் கொண்டு புகழை விரும்பாத மக்கள் பிறந்து வாழ்தல் நிலத்திற்கு பாரமே ஆகும்.

4. எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்
    நச்சப் படாஅ தவன்.

பிறர்க்கு உதவியாக வாழாதக் காரணத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவன் , தான் இறந்த பிறகு எஞ்சி நிற்பது என்று எதனை எண்ணுவானே.

5. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய  
    கோடிஉண் டாயினும் இல்.

கொடுத்து உதவும் பண்பினால் இன்பமுறும் இயல்பு இல்லாதவரிடம், கோடி கோடியாகச் செல்வம் குவிந்தாலும் அதனால் பயன் எதுவுமில்லை.

6. ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
    ஈதல் இயல்பிலா தான்.

தானும் அனுபவிக்காமல் தக்கவர்களுக்கு உதவிடும் இயல்பும் இல்லாமல் வாழ்கிறவன், தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தைத் தொற்றிக்கொண்ட நோயாவான்.

7. அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
    பெற்றாள் தமியள்மூத் தற்று.

பொருள் இல்லாத வறியவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவாதவனுடையச் செல்வம், மிக்க அழகு பெற்றவள் தனியாக வாழ்ந்து முதுமையுற்றாற் போன்றது

8. நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
    நச்சு மரம்பழுத் தற்று.

வெறுக்கப்படுகிறவரிடம் குவிந்துள்ள செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல!.

9. அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
    ஒண்பொருள் கொள்வார் பிறர்.

அன்பெனும் பண்பை அறவே நீக்கி, தன்னையும் வருத்திக் கொண்டு, அறவழிக்குப் புறம்பாகச் சேர்த்துக் குவித்திடும் செல்வத்தைப் பிறர் கொள்ளை கொண்டு போய் விடுவர்.

10. சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
     வறங்கூர்ந் தனையது உடைத்து.

புகழ் பொருந்திய செல்வர் உற்ற சிறிய வறுமை உலகத்தைக் காக்க வல்ல மேகம் வறுமை மிகுந்தாற் போன்ற தன்மை உடையது.

குடிசெயல் வகை(103)

1. கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
    பெருமையின் பீடுடையது இல்.

குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.

2. ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
    நீள்வினையால் நீளும் குடி.

ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்.

3. குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
     மடிதற்றுத் தான்முந் துறும்.

என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.

4. சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
    தாழாது உஞற்று பவர்க்கு.

தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.

5. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
    சுற்றமாச் சுற்றும் உலகு
.

குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்

6. நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
    இல்லாண்மை ஆக்கிக் கொளல்.

நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார்.

7. அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
     ஆற்றுவார் மேற்றே பொறை.

போர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது.

8. குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
    மானங் கருதக் கெடும்.

குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்.

9. இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
   குற்ற மறைப்பான் உடம்பு.

தன் குடிக்கு வரக்குடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ.

10. இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
      நல்லாள் இலாத குடி.

துன்பம் வந்த போது உடனிருந்து தாங்க வல்ல நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடாரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும்.

நல்குரவு(105)

1. இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
    இன்மையே இன்னா தது.

வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.

2. இன்மை எனவொரு பாவி மறுமையும்
    இம்மையும் இன்றி வரும்.

வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.

3. தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
    நல்குரவு என்னும் நசை.

வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்.

4. இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த  
    சொற்பிறக்கும் சோர்வு தரும்.

இல்லாமை எனும் கொடுமை, நல்ல குடியில் பிறந்தவர்களிடம் இழிந்த சொல் பிறப்பதற்கான சோர்வை உருவாக்கி விடும்.

5. நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
    துன்பங்கள் சென்று படும்.

வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.

6. நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
    சொற்பொருள் சோர்வு படும்.

நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.

7. அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
   பிறன்போல நோக்கப் படும்.

அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.

8. இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
    கொன்றது போலும் நிரப்பு.

கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்.

9. நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
     யாதொன்றும் கண்பாடு அரிது.

ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.

10. துப்புர வில்லார் துவரத் துறவாமை
      உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்க கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.

இரவு(106)

1. இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
    அவர்பழி தம்பழி அன்று.

இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று ஒளிப்பாரானால் அது அவர்க்கு பழி, தமக்கு பழி அன்று.

2. இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
     துன்பம் உறாஅ வரின்.

இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்

3. கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
    இரப்புமோ ரேஎர் உடைத்து.

ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.

4. இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
     கனவிலும் தேற்றாதார் மாட்டு.

உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது

5 கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
    இரப்பவர் மேற்கொள் வது.

ஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான்.

6. கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
     எல்லாம் ஒருங்கு கெடும்.

உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.

7. இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
    உள்ளுள் உவப்பது உடைத்து.

இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும்.

8. இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
    மரப்பாவை சென்றுவந் தற்று.

இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.

9. ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
    மேவார் இலாஅக் கடை.

பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும்.

10. இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
      தானேயும் சாலும் கரி.

இல்லை என்பவரிடம், இரப்பவன் கோபம் கொள்ளக்கூடாது. தன்னைப் போலவே பிறர் நிலைமையும் இருக்கலாம் என்பதற்குத் தன் வறுமையே சான்றாக இருக்கிறதே.

கயமை(108)

1. மக்களே போல்வர் கயவர் அவரன்ன
    ஒப்பாரி யாங்கண்ட தில்.

மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.

2. நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
     நெஞ்சத்து அவலம் இலர்.

நன்மை அறிந்தவரை விடக் கயவரே நல்ல பேறு உடையவர், ஏன் என்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்.

3. தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
    மேவன செய்தொழுக லான்.

புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்.

4. அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
    மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.

கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.

5. அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
    அவாவுண்டேல் உண்டாம் சிறிது.

கீழ் மக்களின் ஆசாரத்திற்கு காரணமாக இருப்பது அச்சமே, எஞ்சியவற்றில் அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.

6. அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
    மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.

மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம்.

7. ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
    கூன்கையர் அல்லா தவர்க்கு.

கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார்.

8. சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
    கொல்லப் பயன்படும் கீழ்.

அணுகிக்குறை சொல்லிய அளவிலேயே சான்றோர் பயன்படுவர்; கரும்புபோல் அழித்துப் பிழிந்தால்தான் கீழ்மக்கள் பயன்படுவர்

9. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
    வடுக்காண வற்றாகும் கீழ்.

கீழ் மகன் பிறர் உடுப்பதையும், உண்பதையும் கண்டால் அவர் மேல் பொறாமை கொண்டு, வேண்டும் என்றே குற்றம் காண வல்லவனாவான்.

10. எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
      விற்றற்கு உரியர் விரைந்து.

ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரிய தகுதியாகும்.

Book back

1. படங்கள் உணர்த்தும் குறளின் கருத்தினை மையமிட்டு வகுப்பில் கலந்துரையாடுக



முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்



பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்

 

2. கதைக்கு பொருத்த்மான குறளை தேர்வு  செய்க

“சின்னச்சாமி யாரோ மரத்தோரமா நிற்கிறாங்க யாராய் இருக்கும்” மாட்டு வண்டிய ஓட்டிக்கிட்டே அப்பா கேட்டார்

“ தெரியலப்பா”

”இறங்கி யாருன்னு  பாரு”

வாட்டசாட்டமாய், கண்ணாடியும் அலைபேசியும் கையுமாய் சாலையோரத்தில் வண்டியுடன் ஒருவர் நின்றிருந்தார்

“ஐயா நீங்க”

“வெளியூருப்பா வண்டி நின்னு போச்சு”

“அப்படியா   வண்டியத் தூக்கி மாட்டு வண்டியில வச்சுட்டு வாங்க. மழை வர்ற மாதிரியிருக்கு.. ஊரு ரொம்ப தூரம்.. வேற வண்டியும் வராது”

அவர் உடையையும் உழைத்துக் களைத்த வியர்வை பொங்கிய உடலையும் பார்த்து வரலைன்னுட்டார். மூன்று நான்கு பேர்தான் வண்டியுல இருந்தோம் .. சிறிது தூரம போறதுக்குள்ள மழை கொட்டு கொட்டுன்னு கொட்டிருச்சு.. நாங்க விட்டுக்கு போயிட்டோம்.

இரவு தூங்கப் போறப்ப.. அப்பா சொன்னார் தம்பி.. அந்த சூட்டுக்காரர் மழை தாங்காம நடந்திருக்காரு. தேங்கா விழுந்து மண்ட உடைஞ்சு … வேற யாரோ தூக்கிட்டு வந்திருக்காங்க. நம்ம ஊரு ஆசுபத்திரியில… கட்டுப் போட்டுக்கிட்டு இருந்தாங்க.. பாவம் படிச்சவரா இருக்காரு..சூழ்நிலை புரியாம.. வரமாட்டேன்னு சொன்னாரு, இப்ப வேதனைப்பட்டாரே..

அ) உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்

  கல்லார் அறிவிலா தார்

ஆ) பெயக்கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்

இ) ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றித்

தாழாது உஞற்று பவர்

விடை

அ) உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்

  கல்லார் அறிவிலா தார்

 3. ’நச்சப் படாதவன் ’ செல்வம்- இத்தொடரில் வண்ணமிட்ட சொல்லுக்கு பொருள் தருக

பிறருக்கு உதவி செய்யாத்தால் ஒருவராலும் விரும்பப்படாதவர்

 4. கொடுப்பதூம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய

கோடிஉண் டாயினும் இல்---- இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக

இன்னிசை அளபெடை

 5. பொருளுக்கேற்ற அடியை பொருத்துக

உயிரைவிடச் சிறப்பாகப் பேணிக் காக்கப்படும்- உயிரினும் ஓம்பப் படும்

ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றது- நடு ஊருள் நச்சுமரம் பழுத்தற்று

ஒழுக்கத்தின் வழி உயர்வு அடைவர்- ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

 6. எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்குப்  பொருந்தும் வாய்பாடு எது?

கூவிளம் தேமா மலர்  

7. வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்

கோலொடு நின்றான் இரவு- குறளில் பயின்று வரும் அணியை விளக்குக

உவமையணி

 8. குறிப்புகள் உணர்த்தும் குறளின் கருத்துகள் குறித்துக் கலந்துரையாடுக

அ) அவருக்கு அறிவும் அதுகம். படிப்பும் அதிகம். யாராலும் அவருக்கெதிராக செயல்பட முடியாது

விடாமுயற்சி, சிறந்த அறிவாற்றல் உடையவனின் குடி உயர்ந்து விளங்கும்(குடிசெயல்வகை-1022 குறள்)

ஆ) எச்சாரிக்கையாக இரு. பழகுபவர்களில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று கண்டுபிடிப்பது கடினம்

பகைவர் நம்மை வணங்கி தொழும் போது கையில் கத்தியை மறைத்து வைத்திருப்பர்(கூடாநட்பு-828 குறள்)

இ) அவர் குடும்பம் முன்னேறியிருப்பதற்குக் காரணம் தொடர்ந்து முயல்வதும் தொழிலில் அவருக்கிருந்த அறிவும்

தளராது ஊக்கத்தோடு உழைப்பவனிடம் தொடர்ந்து செல்வம் சேரும்(ஊக்கமுடைமை- 594 குறள்)

ஈ) வாழ்க்கையில் நன்றாகப் பொருளீட்டு. அதுதான உன்னை தாழ்வாக நினைத்தவர்களின்  வாயை அடைக்கும்

பொருள் இல்லாரை எல்லாரும் இகழ்வர். பொருள் உள்ளவரை போற்றுவர்(பொருள் செயல்வகை-759 குறள்)

உ)அக்கம்பக்கத்தாரிடம் பழகாமல் ஒதுங்கியே இருந்தார். துணைக்கும் யாரும் இல்லை. இப்போது உடம்பு சரியில்லாதபோது உதவ யாருமின்றித் திண்டாடுகிறார்

பிறரிடம் அன்போடு வாழ்பவன் உயிருடன் கூடிய  உடல். அன்பு இல்லாத்தால் உயிரற்ற எலும்புக் கூட்டுக்கு சமம்(அன்புடைமை- 80 குறள்)

9. கரப்பிடும்பை இல்லார்- இத்தொடரின் பொருள் கூறுக

தம்மிடமுள்ள பொருளை மறைத்து வைத்தல் என்னும் துன்பம் தராத நல்லவர்

10. தஞ்சம் எளியர் பகைக்கு- இவ்வடுக்குரிய அசைகளையூம் வாய்பாடுகளையும் எழுதுக

தஞ்சம்- தேமா, எளியர்- புளிமா, பகைக்கு- பிறப்பு

11. வறுமையின் காரணமாக உதவி கேட்டு  வருபவரின் தன்மானத்தை எள்ளிநகையாடுவது குறித்து குறளின் கருத்து என்ன?

இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால் இரப்பவரின் உள்ளத்தின் உள்ளே மகிழ்ச்சி பொங்கும்

 12.பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்நாப்போதார் கூறுகிறார்?

பெரிய கத்தி, இரும்பு ஈட்டி, உழைத்தால் கிடைத்த ஊதியம், வில்லும் அம்பும்

விடை   

உழைத்தால் கிடைத்த ஊதியம்

No comments:

Post a Comment

மாநில அரசு

  தேசிய தலைநகரான டெல்லியுடன் சேர்த்து 9 யூனியன் பிரதேசங்கள், 28 மாநிலங்கள் உள்ளன பகுதி VI ல் 152 முதல் 237 வரை உள்ள சட்டபிரிவு மாநிலஙகள் ப...