Friday, January 8, 2021

9 ஆம் வகுப்பு திருக்குறள் பாடப்பகுதி

 

group 4 பொறையுடைமை(16)

1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.

2. பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
    மறத்தல் அதனினும் நன்று.

வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.

3. இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
    வன்மை மடவார்ப் பொறை.

வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.

4. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
    போற்றி யொழுகப் படும்.

பொறுமையின் உறைவிடமாக இருப்பவரைத்தான் நிறைவான மனிதர் என்று உலகம் புகழும்.

5. ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் 
   பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.

6. ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
    பொன்றுந் துணையும் புகழ்.

தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.

7. திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
    அறனல்ல செய்யாமை நன்று.

பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்.

8. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
    தகுதியான் வென்று விடல்.

செருக்கினால் தீங்கானவற்றைச் செய்தவரைத் தாம் தம்முடைய பொறுமைப் பண்பினால் பொறுத்து வென்று விட வேண்டும்

9. துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
    இன்னாச்சொல் நோற்கிற் பவர்.

எல்லை கடந்து நடந்து கொள்பவர்களின் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள் தூய்மையான துறவிகளைப் போன்றவர்கள்.

10. உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
      இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

உணவு உண்ணாமல் நோன்பு கிடப்பவர், பிறர் ‌சொல்லும் கொடுஞ் சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையில்தான் பெரியவர் ஆவர்.

தீவினையச்சம்(21)

1. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
    தீவினை என்னும் செருக்கு.

தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.

2. தீயவை தீய பயத்தலால் தீயவை
    தீயினும் அஞ்சப் படும்.

தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயை விடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்சிட வேண்டும்.

3. அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
    செறுவார்க்கும் செய்யா விடல்.

தீமை செய்தவர்க்கு அதையே திருப்பிச் செய்யாமலிருத்தலை, எல்லா அறிவிலும் முதன்மையான அறிவு என்று போற்றுவர்.

4. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
    அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு
.

பிறனுக்கு கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும் கூட எண்ணக்கூடாது, எண்ணினால் எண்ணியவனுக்கு கேடு விளையுமாறு அறம் எண்ணும்.

5. இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
    இலனாகும் மற்றும் பெயர்த்து.

வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈ.டுபடக்கூடாது; அப்படி ஈ.டுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்.

6. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
    தன்னை அடல்வேண்டா தான்.

துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.

7. எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
    வீயாது பின்சென்று அடும்.

ஒருவர் நேரடியான பகைக்குத் தப்பி வாழ முடியும்; ஆனால், அவர் செய்யும் தீய வினைகள் பெரும் பகையாகி அவரைத் தொடர்ந்து வருத்திக்கொண்டே இருக்கும்.

8. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
   வீயாது அஇஉறைந் தற்று.

தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது.

9. தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
   துன்னற்க தீவினைப் பால்.

தனது நலத்தை விரும்புகிறவன் தீய செயல்களின் பக்கம் சிறிதளவுகூட நெருங்கலாகாது.

10. அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
     தீவினை செய்யான் எனின்.

ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.

கேள்வி(42)

1. செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
    செல்வத்து ளெல்லாந் தலை.

செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்.

2. செவுக்குண வில்லாத போழ்து சிறிது
    வயிற்றுக்கும் ஈயப் படும்.

செவி வழியாக இன்பம் தரும் உணவு இல்லாதபோதே சிறிதளவு உணவு வயிற்றுக்குத் தரும் நிலை ஏற்படும்.

3. செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
   ஆன்றாரோ டொப்பர் நிலத்து.

குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாகக் கேள்வி ஞானம் எனும் செவியுணவு அருந்துவோர் எண்ணப்படுவர்.

4. கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
   ஒற்கத்தின் ஊற்றாந் துணை.

நூல்களைக் கற்காவிட்டாலும், கற்றவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டால், அது நடை தளர்ந்தவனுக்கு உதவிடும் ஊன்றுகோலைப் போலத் துணையாக அமையும்.

5. இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
    ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

வழுக்கு நிலத்தில் நடப்பதற்கு ஊன்றுகோல் உதவுவது போல் ஒழுக்கம் உடையவர்களின் அறிவுரையானது உதவும்.

6. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
   ஆன்ற பெருமை தரும்.

நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

7. பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
    தீண்டிய கேள்வி யவர்.

எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள்.

8. கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் 
    தோட்கப் படாத செவி.

இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்.

9. நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
    வாயின ராதல் அரிது

நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர், வணக்கமானச் சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.

10. செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
      அவியினும் வாழினும் என்.

செவிச்சுவை உணராமல் வாயின் சுவைக்காக மட்டுமே வாழும் மக்கள் உயிரோடு இருப்பதும் ஒன்றுதான் இல்லாமற் போவதும் ஒன்றுதான்.

தெரிந்து தெளிதல்(51)

1. அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
    திறந்தெரிந்து தேறப் படும்.

அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.

2. குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
    நாணுடையான் சுட்டே தெளிவு.

நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.

3. அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
    இன்மை அரிதே வெளிறு.

அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.

4. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல்.

ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து,
மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.

5. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
    கருமமே கட்டளைக் கல்
.

ஒருவர் செய்யும் காரியங்களையே உரைகல்லாகக் கொண்டு, அவர் தரமானவரா அல்லது தரங்கெட்டவரா என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

6. அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
    பற்றிலர் நாணார் பழி.

நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது. அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்.

7. காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
    பேதைமை எல்லாந் தரும்.

அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு செய்வது அறியாமை மட்டுமல்ல; அதனால் பயனற்ற செயல்களே விளையும்.

8. தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
    தீரா இடும்பை தரும்.

ஆராய்ந்து பார்க்காமல் ஒருவரைத் துணையாகத் தேர்வு செய்து, அமர்த்திக் கொண்டால் அவரால் வருங்காலத் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பம் விளையும்.

9. தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
    தேறுக தேறும் பொருள்.

நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது.

10. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
      தீரா இடும்பை தரும்.

ஆராயாமல் ஒருவரைத் தேர்வு செய்து ஏற்றுக் கொள்வதும், ஆராய்ந்து தேர்வு செய்து ஏற்றுக்கொண்டபின் அவரைக் சந்தேகப்படுவதும் தீராத துன்பத்தைத் தரும்.

ஒற்றாடல்(59)

1. ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
    தெற்றென்க மன்னவன் கண்.

நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.

2. எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
    வல்லறிதல் வேந்தன் தொழில்.

எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.

3. ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் 
    கொற்றங் கொளக்கிடந்தது இல்.

நாட்டு நிலவரத்தை ஒற்றர்களைக் கொண்டு அறிந்து அதன் விளைவுகளை ஆராய்ந்து நடந்திடாத அரசின் கொற்றம் தழைத்திட வழியே இல்லை.

4. வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
    அனைவரையும் ஆராய்வது ஒற்று.

தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.

5. கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
    உகாஅமை வல்லதே ஒற்று.

வினாவப்படாத வடிவோடேகூடி கண்ணஞ்சுதலும் இன்றி, அறிந்தபொருளை எவ்விடத்தினும் சோர்வின்றியே அடக்கவல்லவன் ஒற்றனாவன்.

6. துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
    என்செயினும் சோர்விலது ஒற்று.

துறந்தவரின் வடிவத்தை உடையவராய், அறிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்து விடாதவரே ஒற்றர் ஆவர்.

7. மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
    ஐயப்பாடு இல்லதே ஒற்று.

மறைந்த செய்திகளையும் கேட்டறிய வல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணிய வல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.

8. ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
    ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்றுக் கொள்ள வேண்டும்.

9. ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
   சொற்றொக்க தேறப் படும்.

ஓர் ஒற்றரை மற்றோர் ஒற்றர் அறியமுடியாதபடி மூன்று ஒற்றர்களை இயங்கவைத்து அம்மூவரும் சொல்வது ஒத்திருந்தால் அது உண்மையெனக் கொள்ளலாம்.

10. சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
     புறப்படுத்தான் ஆகும் மறை.

ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும்.

வினைத்தூய்மை(66)

1. துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்
    வேண்டிய எல்லாந் தரும்.

ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்.

2. என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
     நன்றி பயவா வினை.

புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும்.

3.ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
   ஆஅதும் என்னு மவர்.

மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்.

4. இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
    நடுக்கற்ற காட்சி யவர்.

தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபட மாட்டார்கள்.

5. எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
    மற்றன்ன செய்யாமை நன்று.

பிறகு நினைத்து வருந்துவதற்குக் காரணமானச் செயல்களைச் செய்யக் கூடாது, ஒரு கால் தவறிச் செய்தாலும் மீண்டும் அத் தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.

6. ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
    சான்றோர் பழிக்கும் வினை.

பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்றச் செயல்களைச் செய்யக்கூடாது.

7. பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
    கழிநல் குரவே தலை.

பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.

8. கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
    முடிந்தாலும் பீழை தரும்.

தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல் செய்பவர்களுக்கு ஒரு வேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும்.

9. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
    பிற்பயக்கும் நற்பா லவை.

பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும். நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும்.

10. சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
     கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.

வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.

பழைமை(81)

1. பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
    கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.

2. நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
    உப்பாதல் சான்றோர் கடன்.

பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிற சான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும்.

3. பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
    செய்தாங்கு அமையாக் கடை.

பழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களைத்தாமே செய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால், அதுவரை பழகிய நட்பு பயனற்றுப்போகும்.

4. விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
    கேளாது நட்டார் செயின்.

உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.

5. பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
    நோதக்க நட்டார் செயின்.

வருந்ததக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம் அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.

6. எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்  
    தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள்.

7. அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
    வழிவந்த கேண்மை யவர்.

அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவுதரும் செயல்களை பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு நீங்காமலிருப்பர்.

8. கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
    நாளிழுக்கம் நட்டார் செயின்.

பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும், கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந்த நண்பர் தவறுசெய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.

9. கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
    விடாஅர் விழையும் உலகு.

உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்

10. விழையார் விழையப் படுப பழையார்கண்
      பண்பின் தலைப்பிரியா தார்.

பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்.

தீ நட்பு(82)

1. பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
    பெருகலிற் குன்றல் இனிது.

அன்பு மிகுதியால் பருகுவார் போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதை விடத் தேய்ந்து குறைவது நல்லது.

2. உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
    பெறினும் இழப்பினும் என்.

தமக்கு பயன் உள்ள போது நட்பு செய்து பயன் இல்லாத போது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன பயன், இழந்தாலும் என்ன பயன்.

3. உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
    கொள்வாரும் கள்வரும் நேர்.

பயனை எண்ணிப்பார்த்து அதற்காகவே நட்புக் கொள்பவரும், விலைமகளிரும், கள்வரும் ஆகிய இந்த மூவரும் ஒரே மாதிரியானவர்களே ஆவார்கள்.

4. அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
     தமரின் தனிமை தலை.

போர் வந்த போது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவை விட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது.

5. செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
    எய்தலின் எய்தாமை நன்று.

காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதை விட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.

6. பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
    ஏதின்மை கோடி உறும்.

அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்.

7. நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
    பத்தடுத்த கோடி உறும்.

சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்.

8. ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
    சொல்லாடார் சோர விடல்.

முடியும் செயலையும் முடியாத படி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் செய்யாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்.

9. கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
    சொல்வேறு பட்டார் தொடர்பு.

செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும்.

10. எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
      மன்றில் பழிப்பார் தொடர்பு.

தனியாகச் சிந்திக்கும் போத இனிமையாகப் பழகிவிட்டுப் பொது மன்றத்தில் பழித்துப் பேசுபவரின் நட்பு தம்மை அணுகாமல் விலக்கிக் கொள்ளப்படவேண்டும்.

பேதைமை(84)

1. பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
    ஊதியம் போக விடல்.

பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.

2. பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
    கையல்ல தன்கட் செயல்.

தன்னால் இயலாத செயல்களை விரும்பி, அவற்றில் தலையிடுவது, என்பது பேதைமைகளில் எல்லாம் மிகப்பெரிய பேதைமையாகும்.

3. நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
    பேணாமை பேதை தொழில்.

தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள்.

4. ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
    பேதையின் பேதையார் இல்.

நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை

5. ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
    தான்புக் கழுந்தும் அளறு.

எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.

6. பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
    பேதை வினைமேற் கொளின்.

நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடர முடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக் கொள்வர்.

7. ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
    பெருஞ்செல்வம் உற்றக் கடை.

அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக் கொள்ளப் பயன்படுமேயல்லாமல் பசித்திருக்கும் பாசமுள்ள சுற்றத்தாருக்குப் பயன்படாது.

8. மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
    கையொன்று உடைமை பெறின்.

நல்லது கெட்டது தெரியாதவன் பேதை; அந்தப் பேதையின் கையில் ஒரு பொருளும் கிடைத்துவிட்டால் பித்துப் பிடித்தவர்கள் கள்ளையும் குடித்துவிட்ட கதையாக ஆகிவிடும்.

9. பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
    பீழை தருவதொன் றில்.

அறிவற்ற பேதைகளுடன் கொள்ளும் நட்பு மிகவும் இனிமையானது; ஏனென்றால் அவர்களிடமிருந்து புரியும்போது எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை.

10. கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
     குழாஅத்துப் பேதை புகல்.

அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது.

புல்லறிவாண்மை(85)

1. அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
    இன்மையா வையா துலகு.

அறிவுப் பஞ்சம்தான் மிகக் கொடுமையான பஞ்சமாகும். மற்ற பஞ்சங்களைக்கூட உலகம் அவ்வளவாகப் பொருட்படுத்தாது.

2. அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
     இல்லை பெறுவான் தவம்.

அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.

3. அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
    செறுவார்க்கும் செய்தல் அரிது.

அறிவில்லாதவர் தம்மைத்தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்யமுடியாத அளவினதாகும்.

4. வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
     உடையம்யாம் என்னும் செருக்கு.

 ஒருவன் தன்னைத்தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை எனப்படும்.

5. கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
    வல்லதூஉம் ஐயம் தரும்.

அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும்.

6. அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
    குற்றம் மறையா வழி.

தம்மிடத்தில் உள்ளக் குற்றத்தை அறிந்து நீக்காத போது , உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும், ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.

7. அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
    பெருமிறை தானே தனக்கு.

அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.

8. ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
    போஒம் அளவுமோர் நோய்.

தனக்கு நன்மையானவற்றை பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.

9. காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
    கண்டானாம் தான்கண்ட வாறு.

அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான்.

10. உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
     அலகையா வைக்கப் படும்.

உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.

இகல்(86)

1. இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
    பண்பின்மை பாரிக்கும் நோய்.

மனமாறுபாடு காரணமாக ஏற்படுகிற பகையுணர்வு மக்களை ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் செய்கிற தீய பண்பாகும்.

2. பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
    இன்னாசெய் யாமை தலை.

ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும் தான் இகழ் கொண்டு அவர்க்கு துன்பம் செய்யாதிருத்தல் சிறந்ததாகும்.

3. இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
    தாவில் விளக்கம் தரும்.

மனவேறுபாடு என்னும் துன்பம் தரும் நோயை மனத்திலிருந்து நீக்கினால், அது ஒருவனுக்குக் கெடாத, அழியாத புகழைக் கொடுக்கும்.

4. இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
    துன்பத்துள் துன்பங் கெடின்.

துன்பத்திலேயே பெருந்துன்பம் பகையுணர்வுதான். அந்த உணர்வை ஒருவன் அகற்றி விடுவானேயானால், அது இன்பத்திலேயே பெரும் இன்பமாகும்.

5. இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
    மிக்லூக்கும் தன்மை யவர்.

மனத்தில் மாறுபாடான எண்ணம் உருவானால் அதற்கு இடம் தராமல் நடக்கக்கூடிய ஆற்றலுடையவர்களை வெல்லக்கூடியவர்கள் யாருமில்லை.

6. இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
    தவலும் கெடலும் நணித்து.

மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும்.

7. மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
    இன்னா அறிவி னவர்.

பகை உணர்வு கொள்ளும் தீய அறிவுடையவர்கள் வெற்றிக்கு வழிகாட்டும் உண்மைப் பொருளை அறியமாட்டார்கள்.

8. இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
    மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.

இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும், அதனை எதிர்த்து வெல்லக்கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்.

9. இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
    மிகல்காணும் கேடு தரற்கு.

ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான், தனக்கு கேடு தருவிக்கொள்ளும் போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான்.

10. இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
      நன்னயம் என்னும் செருக்கு.

மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும் நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெருமகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும்.

குடிமை(96)

1. இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
    செப்பமும் நாணும் ஒருங்கு.

நடுவு நிமையும் நாணமும் உயர்குடியில் பிறந்தவனிடத்தில் அல்லாமல் மற்றவரிடத்தில் இயல்பாக ஒருசேர அமைவதில்லை.

2.ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
   இழுக்கார் குடிப்பிறந் தார்.

ஒழுக்கம், வாய்மை, மானம் ஆகிய இந்த மூன்றிலும் நிலைதவறி நடக்காதவர்களே உயர்ந்த குடியில் பிறந்தவர்களாகக் கருதப்படுவார்கள்.

3. நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
    வகையென்ப வாய்மைக் குடிக்கு.

உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்லப் பண்புகள் என்பர்.

4. அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
    குன்றுவ செய்தல் இலர்.

பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை.

5. வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
    பண்பில் தலைப்பிரிதல் இன்று.

பழம் பெருமை வாய்ந்த குடியில் பிறந்தவர்கள் வறுமையால் தாக்குண்ட போதிலும், பிறருக்கு வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள்.

6. சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
    குலம்பற்றி வாழ்தும்என் பார்.

மாசற்ற பண்புடன் வாழ்வதாகக் கருதிக்கொண்டிருப்பவர்கள், வஞ்சக நினைவுடன் தகாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள்.

7. குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
     மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.

உயர் குடியில் பிறந்தவரிடத்தில் உண்டாகும் குற்றம், ஆகாயத்தில் திங்களிடம் காணப்படும் களங்கம்போல் பலரறியத் தோன்றும்.

8. நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
    குலத்தின்கண் ஐயப் படும்.

ஒருவனுடைய நல்லப் பண்புகளுக்கிடையில் அன்பற்றத் தன்மைக் காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப் பிறப்பு பற்றி ஐயப்பட நேரும்.

9. நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
    குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்

இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும், அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச் சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.

10. நலம்வேண்டி னாணுடைமை வேண்டுங் குலம்வேண்டின்
     வேண்டுக யார்க்கும் பணிவு.

சான்றாண்மை(99)

1. கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
    சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

கடமை இவை என்று அறிந்து சான்றான்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.

2. குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
    எந்நலத்து உள்ளதூஉம் அன்று.

சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவறுடைய பண்புகளின் நலமே, மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.

3. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
    ஐந்துசால் ஊன்றிய தூண்.

அன்பு, நாணம்,ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை, என்னும் ஐந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.

4. கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
    சொல்லா நலத்தது சால்பு.

தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது, சால்பு பிறருடையத் தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது   

5. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
    மாற்றாரை மாற்றும் படை.

ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும், அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.

6. சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
   துலையல்லார் கண்ணும் கொளல்.

சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும்தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.

7. இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
   என்ன பயத்ததோ சால்பு.

துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யா விட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்.

8.இன்மை ஒருவற்கு இனிவன்று சால்பென்னும்
   திண்மைஉண் டாகப் பெறின்.

சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.

9. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
    ஆழி எனப்படு வார்.

தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்.

10. சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
      தாங்காது மன்னோ பொறை.

சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால் இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய் விடும்.

நாண் உடைமை(102)

1. கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
    நல்லவர் நாணுப் பிற.

ஒருவர் தமது தகாத நடத்தையின் காரணமாக நாணுவதற்கும், நல்ல பெண்களுக்கு இயல்பாக ஏற்படும் நாணத்துக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு.

2. ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
    நாணுடைமை மாந்தர் சிறப்பு.

உணவும், உடையும் எஞ்சி நிற்கும் மற்றவையும், எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை, மக்களின் சிறப்பியல்பாக விளங்குவது நாணுடைமையே ஆகும்.

3. ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
    நன்மை குறித்தது சால்பு.

எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது.

4. அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
    பிணிஅன்றோ பீடு நடை.

சான்றோர்க்கு நாணுடைமை அணிகலம் அன்றோ, அந்த அணிகலம் இல்லையானால் பெருமிதமாக நடக்கும் நடை ஒரு நோய் அன்றோ.

5. பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
    உறைபதி என்னும் உலகு.

பிறர்க்கு வரும் பழிக்காகவும், தமக்கு வரும் பழிக்காகவும் நாணுகின்றவர் நாணத்திற்கு உறைவிட மானவர் என்று உலகம் சொல்லும்.

6. நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
    பேணலர் மேலா யவர்.

நாணமாகிய வேலியை தமக்கு காவலாகச் செய்து கொள்ளாமல், மேலோர் பரந்த உலகில் வாழும் வாழ்க்கை விரும்பி மேற்கொள்ள மாட்டார்.

7. நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
    நாண்துறவார் நாணாள் பவர்.

நாணத்தை தமக்கரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர், உயிரைக் காக்கும் பொருட்டாக நாணத்தை விட மாட்டார்.

8. பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
    அறம்நாணத் தக்கது உடைத்து.

ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்

9. குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
     நாணின்மை நின்றக் கடை.

ஒருவன் கொள்கை தவறினால் , அத் தவறு அவனுடையக் குடிப் பிறப்பைத் கெடுக்கும், நாணில்லாத தன்மை நிலைப் பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்.

10. நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
      நாணால் உயிர்மருட்டி அற்று.

மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது.

உழவு(104)

1. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
    உழந்தும் உழவே தலை.

உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.

2. உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
   எழுவாரை எல்லாம் பொறுத்து.

உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர், எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தாற்கு அச்சாணி போன்றவர்.

3. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
    தொழுதுண்டு பின்செல் பவர்.

உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

4. பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
    அலகுடை நீழ லவர்.

நெல் வளம் உடைய தண்ணளி பொருந்திய உழவர், பல அரசரின் குடை நிழல்களையும் தம் குடையின் கீழ் காணவல்லவர் ஆவர்.

5. இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
    கைசெய்தூண் மாலை யவர்.

கையால் தொழில் செய்து உணவு தேடி உண்ணும் இயல்புடைய தொழிலாளர், பிறரிடம் சென்று இரக்கமாட்டார், தம்மிடம் இரந்தவர்க்கு ஒளிக்காமல் ஒரு பொருள் ஈவார்.

6. உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
    விட்டேம்என் பார்க்கும் நிலை.

உழவருடைய கை, தொழில் செய்யாமல் மடங்கியிருக்குமானால், விரும்புகின்ற எந்தப் பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை.

7. தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
    வேண்டாது சாலப் படும்.

ஒரு பலம் புழுதி கால்பலம் ஆகும்படி உழுது காயவிட்டால், ஒரு பிடி எருவும் இடவேண்டாமல் அந் நிலத்தில் பயிர் செலுத்தி செழித்து விளையும்.

8. ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
   நீரினும் நன்றதன் காப்பு.

ஏர் உழுதலை விட எரு இடுதல் நல்லது, இந்த இரண்டும் சேர்ந்துக் களை நீக்கிய பின், நீர் பாய்ச்சுதலை விடக் காவல்காத்தல் நல்லது.

9. செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
    இல்லாளின் ஊடி விடும்.

நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும்.

10. இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
     நிலமென்னும் நல்லாள் நகும்.

எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.

Book Back

1.படத்திற்கேற்ற குறளை தேர்வு செய்க


1.நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்

பேணாமை பேதை தொழில்

2.விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்

கேளாது நட்டார் செயின்

3.செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாந் தலை

விடை

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாந் தலை


2.


1.இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின்

2.ஏவவும் செய்கலான் தான்தேறான்  அவ்வுயிர்

போஒம் அளவும்ஓர் நோய்

3.சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்  அதனால்

உழந்தும்  உழவே தலை

விடை

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்  அதனால்

உழந்தும்  உழவே தலை

 

2. பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக

ஆண்டில் இளையவனென்று அந்தோ அகந்தையினால்

ஈண்டிங்கு இகழ்ந்தென்னை ஏளனம்செய்-மாண்பற்ற

காரிருள்போல்  உள்ளத்தான் காந்திமதி நாதனைப்

பாரதி சின்னப் பயல்


1.செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என்

2.மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல்

3.குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்

விடை

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல்

 3. பொருளிக்கேற்ற அடியை கண்டுபிடித்துப் பொருத்துக


1. பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ யற்று- சுடாத மண்கலத்தில் நீரூற்றி வைப்பதைப் போல்

2. தத்தம் கருமமே கட்டளைக்கல் – ஒருவனின் செயல்பாடுகளே உரசி அறியும் உரைகல்

3. அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்- அவ்வளவிற்குப் பெருமை உண்டாக்கும்


 

1.கண்டானாம் தான் கண்டவாறு- தெரிந்த அளவில் அறிவுடையவனாய்த் தோன்றுவான்

2. அறம் நாணத்தக்கது உடைத்து- அறம் வெட்கப்பட்டு அவனை விட்டு விலகிப் போகும்

3. மாற்றாரை மாற்றும் படை- பகைவரையும்  நட்பாக்கும் கருவி

4. தீரா இடும்பை தருவது எது?

அ)ஆராயாமை, ஐயப்படுதல்

ஆ) குணம், குற்றம்

இ) பெருமை, சிறுமை

ஈ)நாடாமை, பேணாமை

விடை

அ)ஆராயாமை, ஐயப்படுதல்

5. கதைக்கு பொருத்தமான குறளை தேர்வு செய்து காரணத்தை  எழுதுக

மெளனவிரதம் என்னும் தலைப்பில் நான்கு நண்பர்கள் ஒரு சொற்பொழிவைக் கேட்டனர். தாங்களும் ஒரு வாரத்துக்கு மெளனவிரதம் இருப்பதாகத் தீர்மானம் செய்தனர். மெளனவிரதம் ஆரம்பமாகி  விட்டது! கொஞ்ச நேரம் போனதும் ஒருவன் சொன்னான், “ எங்கள் வீட்டு அடுப்பை அணைத்துவிட்டேனா தெரியவில்லையே!”

பக்கத்திலிருத்தவன்  “ அடப்பாவி!பேசிட்டியே!” என்றான்

உடனே மூன்றாவது ஆள்,” நீ மட்டும் என்ன?  நீயும்தான் பேசிவிட்டாய்!” என்றான்

நான்காவது ஆள்,”நல்லவேளை! நான் மட்டும் பேசவில்லை!” என்றான்

இப்படியாக அவர்களின் மெளனவிரதம் முடிந்துபோனது

விடை

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்

பேதையின் பேதையார் இல்

 

6. திருக்குறள் பற்றிய சில ஆராய்ச்சிச் செய்திகள்

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு- 1812

திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகர ஒற்றில் முடிகிறது

திருக்குறள்  இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்

திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்

திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழிதியவர்- மணக்குடவர்

திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது

ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது

திருக்குறளை ஆங்கிலத்தில் முதலில் முழுமையாக மொழிபெயர்த்தவர்- ஜி.யு.போப்

திருக்குறள் இதுவரை  நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

 7. ஐந்து சால்புகளில் இரண்டு

அ) வானமும் நாணமும்

ஆ) நாணமும் இணக்கமும்

இ) இணக்கமும் சுணக்கமும்

ஈ)இணக்கமும் பிணக்கமும்

விடை

நாணமும் இணக்கமும்

8. கோடிட்ட இடங்களுக்கான விடையைக் கட்டத்துள் கண்டறிந்து வட்டமிடுக

அ. அனைவரிடமும் இணக்கம் என்பதன் பொருள் ஒப்புரவு

ஆ. உலகத்துக்கு அச்சாணி போன்றவர் உழவர்

இ. தான் நாணான் ஆயின் அறம் நாணத் தக்கது

ஈ. ஆழி என்பதன் பொருள் கடல்

உ. மாற்றாரை மாற்றும் படை

ஊ. ஒழுக்கமான குடியில் பிறந்தவர் தவறு செய்வதில்லை

 

9. வினாக்கள்

9.a இறக்கும்வரை உள்ள நோய் எது?

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு

ஐந்துசால்பு ஊன்றிய தூண்

இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்கி எழுதுக

ஏகதேச உருவக அணி

 9.bஉலகத்திற்கு அச்சாணியாய் இருப்பவர் யார்? ஏன்?

உழவர்

 9.c  காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

        கண்டானாம்  தான்கண்ட வாறு

இக்குறட்பாவில் பயின்று வரும் தொடைநயத்தை எழுதுக

சீர் மோனை- காணாதான்,காணான்

சீர் எதுகை- கண்டானாம் ,கண்டவாறு

No comments:

Post a Comment

மாநில அரசு

  தேசிய தலைநகரான டெல்லியுடன் சேர்த்து 9 யூனியன் பிரதேசங்கள், 28 மாநிலங்கள் உள்ளன பகுதி VI ல் 152 முதல் 237 வரை உள்ள சட்டபிரிவு மாநிலஙகள் ப...